**தமிழ் வான் அவையில்
தன்முனைக் கவிதைகள் ஒரு அறிமுகம் **
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் வான் அவை மக்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி..எல்லாரும் நலம் தானே.. நாட்டில் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.. அதற்கு காரணம் இதுவரை 200 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது..
இன்னிக்கு அதைப் பற்றி நான் கட்டுரை வரையவில்லை.. ஆனால் இந்தச் செய்தி நம்மையெல்லாம் ஆசுவாசப்படுத்தியுள்ளது என்ற மனநிறைவோடு.. உங்களுக்கெல்லாம் கொரோனா வைரஸைப் போன்று வெகு வேகமாக உலக நாடுகளில் தமிழ் இலக்கிய உலகில் பரவி வரும் ஒரு புதிய வகை கவிதை வகைமையை குறித்து எழுதப் போகிறேன்.. ஆனால் கொரோனா வைரஸைப் போல் இந்தக் கவிதை வகைமையால் உலகிற்கு ஆபத்து இல்லை.. அதற்கு மாறாக நூற்றுக்கணக்கான கவிஞர்களையும்.. ஆயிரக்கணக்கான வாசகர்களின் இதயங்களை கவர்ந்துக் கொண்டிருக்கிறது..
இதன் வேரை சற்று ஆராய்வோமா..
வத்தலக்குண்டு தமிழ்ச்செம்மல் வதிலை பிரபா நடத்தும் மகாகவி அக்டோபர் 2017 இதழில்
நமது ஐதராபாத் எழுத்தாளர் திருமதி சாந்தா தத்தின் ஒரு அரிய கட்டுரை வெளிவந்தது..
தெலுங்கு பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தரும் சாகித்ய அகாதெமி விருதாளருமான டாக்டர் கோபி அவர்களால் உருவாக்கப்பட்ட "நானிலு" (EPIGRAM) என்ற புதிய கவிதை வகைமையை.. பாரதி 1916ல் சுதேச மித்திரனில் சப்பானிய ஐக்கூவை தமிழில் அறிமுகப்படுத்தியது போல.. எழுத்தாளர் சாந்தா தத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்.. அந்தக் கட்டுரையின் சாராம்சம் என்னவென்றால்..
நானிலு என்றால் சிறியது.. நேனு.. நுவ்வு (நான்.. நீ..) என்பது போல..இதற்கு பெரிய இலக்கிய இலக்கணங்கள் ஒன்றுமில்லை
கவிஞர்களை கவரும் விதமாக
இரண்டே விதிகள் தான்..
1. மொத்தமே நான்கு வரிகள்..
2. 25 எழுத்துக்கள்..மேலும்
அடர்த்தியான பொருளுடையதாக முதலிரு வரிகள் ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும்.. அடுத்த இரண்டு வரிகள் அதைச் சார்ந்தோ அல்லது எதிர்ப்பதமாகவோ இருக்க வேண்டும்.. அவ்வளவு தான்..
இந்தக் கவிதை வகைமை தெலுங்கு இலக்கிய உலகில் பேராதரவைப் பெற்றது..
பாடுபொருள் எதுவாக இருந்தாலும் பொருட்செறிவு அதிகமாக காணப்படுவது நானிலுவின் சிறப்பு..
உதாரணமாக சாந்தா தத் அவர்கள் கோபியின் தெலுங்கு கவிதையை தமிழில் இப்படித் தருகிறார்..
கூட்டத்தின் நிழல்கள் /
கரைந்துப் போகின்றன/
உன் நிழல் தென்படாவிட்டால் /
உன்னையே தேடிக் கொள்..
நாமும் இக்கவிதையின் பொருளில் கரைந்து தான் போகிறோமல்லவா..
இப்படி வெளியிடப்பட்ட கட்டுரையை தமிழ் நாட்டின் பிரபல கவிஞர் கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் வாசிக்கிறார்..தமிழின் மீது தீராக் காதல் கொண்ட கவிச்சுடரால் இந்தக் கட்டுரையை எளிதாக கடந்துச் செல்ல முடியவில்லை..
கவிஞர்கள் /எழுத்தாளர்கள் தான் படைப்புலகின் பிரம்மாக்களாயிற்றே.. அதை உறுதிப்படுத்தும் விதமாக.. 13.11.2017 ஆம் நாளன்று "தெலுங்கு நானிலு"வை தமிழுக்கேற்ப முழுமையாக மாற்றி.. தனி இலக்கணம் அமைத்து.. புதிய வடிவத்தை உருவாக்கி.. தனது செல்லக் குழந்தைக்கு "தன்முனைக் கவிதைகள்" (SELF ASSERTIVE VERSUS) யென பெயரிட்டு தமிழுக்கு வழங்கினார்.. அவர் எழுத ஆரம்பித்த நாளிலேயே நானும் (சாரதா சந்தோஷ்) தேனி கவிஞர் அனுராஜ் அவர்களும் எழுதத் தொடங்கினோம்.. உடனே கவிச்சுடர் முகநூலில் "தன்முனைக் கவிதைகள் குழுமம்" ஆரம்பித்தார்.. இங்கு உலகலாவிய கவிஞர்கள் நீர்நிலைத் தேடும் பறவைகளாய் வந்து.. தங்கி.. இளைப்பாறி கவிவடிக்கின்றனர்..
இன்று எங்களுடன் கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜூ.. கவிஞர் ராஜூ ஆரோக்யசாமி.. கவிஞர் ஜென்சி.. கவிஞர் ரசிகுணா.. கவிஞர் இளவல் ஹரிஹரன்.. போன்றோர் குழுமத்தை நிர்வகிக்கின்றனர்..
மேலும் கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜூ புலனத்தில் "தன்முனைக் கவிதைகள் தமிழ்ப் பேரவை" ஒன்றையும் நடத்தி வருகிறார்.. தமிழ் இலக்கிய உலகில் ஆரம்பத்தில் சில சலசலப்புகள் ஏற்பட்டாலும்.. இன்று தமிழ் இலக்கிய உலகில் மரபுக் கவிதை.. புதுக் கவிதை.. ஐக்கூ.. நவீன கவிதை போன்று அனைவராலும் ஏற்கப்பட்ட ஒரு கவிதை வகைமையாகவே மாறி விட்டது எனலாம்..
இக் குழுமம் வாயிலாக கவிச்சுடர் கா.ந கல்யாணசுந்தரம் பல தன்முனைக் கவிதை தொகுப்பு நூல்களை தொகுத்து நூற்றுக்கணக்கான கவிஞர்களின் தன்முனைக் கவிதைகளை அச்சிலேற்றி வருகிறார்..
அதில் கவிச்சுடர் தொகுத்து முதலில் வெளிவந்த தொகுப்பு நூல்கள் :
நான் நீ இந்த உலகம்..(31 கவிஞர்கள்)
வானம் தொடும் வண்ணத்துப்பூச்சிகள்.. (52 கவிஞர்கள்)
கரை சேரும் காகிதக் கப்பல்கள்..
கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜூ தொகுத்த பெண் கவிஞர்களின் முதல் தன்முனைக் கவிதைகள் தொகுப்பு நூல் :
மகரந்தம் தூவும் மலர்கள் (26)
முதலில் வெளிவந்த தனி நூல்கள்
குழந்தை வரைந்த காகிதம் - கவிஞர் இளவல் ஹரிஹரன்..
சுவரோர செம்பருத்தி - கவிஞர் காரைக்கால் இரா. மேகலா..யென
சமீபத்தில் கவிச்சுடரின் தனி நூலான பூக்கள் பூக்கும் தருணம் வரை
மொத்தம் 20 தன்முனைக் கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன..
45க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய சிற்றிதழ்கள்.. மின்னிதழ்கள்.. பல்சுவை இதழ்களில் சிறப்பாக எழுதும் பல தன்முனைக் கவிஞர்களின் கவிதைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன..
இலக்கியம் வளர்க்கும் 10க்கும் மேற்பட்ட முகநூல் தமிழ்க் குழுமங்களில் தன்முனைக் கவிதைகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுவது தன்முனைக் கவிதை வகைமைக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்..
தமிழில் தன்முனைக் கவிதை வகைமையை உருவாக்கிய கவிச்சுடர் கா.ந கல்யாணசுந்தரம் அவர்களை தமிழ் இலக்கிய உலகம்
"தன்முனைக் கவிதைகளின் தந்தை" யென அன்புடன் அழைக்கிறது..
எல்லாம் சரி.. தன்முனைக் கவிதைகளை எப்படி எழுதுவது..?! அதன் இலக்கணம் தான் என்ன..?!
பாடு பொருள் என்னென்ன?! யென நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது..
இதோ உங்களுக்காக.. கவிச்சுடர் கா.ந கல்யாணசுந்தரம் வகுத்த தன்முனைக் கவிதை இலக்கணங்கள்..
**கவிதைகள் நான்கு வரிகளில் இருக்க வேண்டும்..
**வரிக்கு அதிகபட்சமாக மூன்று சொற்கள்.. குறைந்த பட்சம் இரண்டு சொற்கள் இருக்கலாம்..
**சொற்கள் எளிமையாக இருக்க வேண்டும்.. தம்மை ஈடுபடுத்திக் கொண்டு தன்முனைப்போடு எழுதுதல் சிறப்பு..
**இரண்டாவது வரியில் ஒரு நிறுத்தம் வேண்டும்.. அதாவது சொல்ல வந்த செய்தி இரண்டு வரிகளில் முற்றுப் பெற வேண்டும்..
*மூன்றாவது நான்காவது வரிகள்.. முதலிரண்டு வரிகளில் சொல்லப்பட்ட செய்திக்கு /நிகழ்வுக்கு ஒட்டிய அல்லது முரணாகவோ இருத்தல் வேண்டும்.. *தன்முனைக் கவிதை மூன்று காலங்களிலும் எழுதலாம்..
**கவிதையில் குறியீடுகள் வேண்டாம் (Punctuation)
**தன்முனைக் கவிதைகளுக்கு தலைப்பிடல் வேண்டாம்..
**வேற்று மொழி வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்..
**தமிழ் மண்சார்ந்த மரபு, கலாச்சாரம், வாழ்வியல், அவலம், போன்றவற்றை பிரதிபலிக்கும் வகைமையில் தன்முனைக் கவிதைகள் இருந்தால் கூடுதல் சிறப்பு..
உதாரணக் கவிதைகள்
**புத்தனுக்கு பேராசை காட்டி /
அழைத்த போதிமரம்/
இலையுதிர்த்து தனது துறவில் /
ஞானம் பெற்றது..
கவிச்சுடர் கா.ந கல்யாணசுந்தரம்
**தத்தெடுத்த இடத்தில் /
தரமாய் தகவமைத்துக் கொண்டது/
தன்முனைக் கவிதைகள் /
பிறந்தகப் பெருமை குலையாமல்..
கவிஞர் சாந்தா தத்
**என்னதான் /
தலைகீழாகப் பிடித்தாலும் /
நேராகவே எரிகிறது /
எரிதழல்..
கவிஞர் அனுராஜ்
**ஆரத்தழுவும் /
காதலின் நிறம் /
மங்காதிருப்பதே /
மணவாழ்வின் வெற்றி..
கவிஞர் இளவல் ஹரிஹரன்
**சிரிக்கும் ஓவியங்கள் /
அறிவதேயில்லை /
தூரிகையின் வலியையும் /
ஓவியனின் பசியையும்..
கவிஞர் ஜென்சி
**இலையொன்று உதிர /
உயிர் உதிரலின் பதற்றம் /
உள்ளுக்குள் பரவிட /
கட்டித் தழுவினேன் மரத்தை..
கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜு
**என்னை விட்டுவிட்டு /
நடந்துப் பார்க்கிறேன் /
உப்புசப்பு இல்லாமலிருக்கிறது /
இந்த உலகம்..
கவிஞர் துரை வசந்தராஜன்
**நள்ளிரவில் பிடிநழுவி /
உனைவிட்டு நீங்கு /
என்பொழுதில் உன்பொழுதை/
தொலைத்த படி ஏங்கு..
கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்
**மண் வாசனை பரப்பும் /
மழையில் நனைந்த நிலமாய்../
பரவுகிறது காதலில் நனைந்து/
என்னுள் உன் வாசனை..
சாரதா க. சந்தோஷ்
இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்..
அட.. அதற்குள் வாசகர்களில் சிலர் எழுத தொடங்கி விட்டார்களே..
அது தான் தன்முனைக் கவிதை வகைமையின் சிறப்பு..
தன்முனைக் கவிதைகள் நூற்றாண்டு காண வேண்டும்.. ஆயிரக்கணக்கான நூல்கள் வெளிவர வேண்டும்..
கவிஞர்கள் மட்டுமல்ல.. வாசகர்கள் வட்டமும் பெருக வேண்டும் என்பது என் அவா..
கலைவாணியின் அருள் பெற்ற தங்கத் தாரகை.. தமிழ் வான் அவையின் தலைவர் இலக்கிய உலகில் கவுசியென அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் அன்புத் தோழி திருமதி சந்திர கவுரி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும்.. நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.. .
வாழ்க தமிழ்..
வளர்க தமிழ் வான் அவை..
உங்கள் அன்புத் தோழி
சாரதா க. சந்தோஷ்
ஐதராபாத்
9640596371
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாசகர்களே உங்கள் கருத்துக்களைப் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்