குறுந்தொகை இலக்கியம்
பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ
பிரான்சு
தமிழமுதை அள்ளிப் பருக ஆவலுடன் இருக்கும் அனைவருக்கும் கனிவான கைக்குவிப்பு. இனிய நல்வாழ்த்துகள்!
கோடை காலம்; நிலவோ மேகமோ இல்லாத நேரம்; மெல்லிய தென்றல்!மொட்டை மாடியில் தனியாக மல்லாந்து படுத்திருக்கிறீர்கள்! மேலே நீல விதானத்து நித்திலப் பூம் பந்தர் உங்கள் கண்களைக் கவர்கிறது. கருநீல வெல்வெட் துணியில் கண்கொள்ளாக் காட்சி! ஒரு கோடியின் மேற்பட விரிந்த வானத்தின் மாட்சி ! அப்போது விண்மீன் ஒன்று உங்களைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறது அழகென்பாள் அங்கெல்லாம் கவிதை வழங்கிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் தற்கால வானவியல் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் ரசித்துக் கொண்டிருக்கும் அந்த விண்மீன் இப்போது இல்லை; உண்மை தான், அதன் ஒளி பல்லாயிரக்கணக்கான ஒளி ஆண்டுகளைக் கடந்து இப்போதுதான் உங்கள் கண்களை வந்து அடைந்து இருக்கிறது. இது இக்கால வானவியல் கூறும் உண்மை. அது போலத்தான் சங்கப் பாடல்களும் ; ஈராயிரம் இல்லை, இல்லை, இல்லை, பத்தாயிரம், இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கால மணலில் நம் புலவர்கள் பதித்த காலடித்தடங்கள்தாம் சங்கப் பாடல்கள்.
எந்தத் துறையில் துறையில் அறிவு பெற வேண்டும் என்றாலும் அந்தத் துறையின் சொற்களை (technical terms) அறிந்து இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, வேதியல் படிக்க விரும்புபவர்கள் நேரடியாகச் சோதனைச் சாலைக்குள் நுழைந்துவிட முடியாது; அங்குப் பயிற்சி தருபவர்கள் 'beaker', 'conical flask', 'pippette', 'acid', 'alkali', 'litmus'' ..போன்ற சொற்களைப் பயன்படுத்தும் போது அவற்றைப் புரிந்துகொள்ளும் அறிவு தேவை அல்லவா! அதைப் போலவே, சங்கப் பாடல்களைப் பயில்வதற்கும் அடிப்படை அறிவு தேவை!
ஆங்கில எழுத்துக்களைப் படிக்கத் தெரியும், எழுதத் தெரியும் என்பதற்காக ஷேக்ஸ்பியரை, மில்தனைப் படிக்க முடியுமா? இல்லை, புரிந்துகொள்ளத்தான் முடியுமா? அவர்கள் காலத்தைப் பற்றிய அறிவு அக்காலத்து ஆங்கில இலக்கியம் பற்றிய அறிவு இன்றியமையாதவை. ஷேக்ஸ்பியரைப் புரிந்து கொள்ள அவர் காலத்து நாடகம், நாடகக் கொட்டகை போன்றவற்றில் அடிப்படை அறிவு வேண்டும். மில்தனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவன் காலத்து 'blank verse',கிரேக்க, உரோமானிய புராணங்கள் ...பற்றிய அறிவு அவசியம்.
இவற்றைப் போலவே, சங்க இலக்கிய பாடல்களைப் புரிந்துகொள்ள அக்காலத் தமிழின் இயல்புகள், சொற்கள், இலக்கியக் கூறுகளான களவு, கற்பு, திணை , துறை, உவமம், உள்ளுறை, இறைச்சி, முதற் பொருள், உரிப்பொருள், தலைவன், தலைவி, தோழி, நற்றாய், செவிலித் தாய், இரவுக்குறி, வெறியாட்டு, அறத்தொடு நிற்றல், மடலேறுதல்... போன்றவற்றைப் பற்றிய அறிவு இருந்தால்தான் சங்கப் பாடல்களைப் புரிந்துகொள்ள முடியும். இவற்றை இங்கே விளக்கிச் சொல்ல வேண்டும் என்றால் பல வகுப்புகள் தேவைப்படும்.
ஈழத்துத் தனிப்பெரும் தமிழறிஞர் ஆறுமுக நாவலர் : 18 -ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர். பெர்சிவல் பாதிரியாரின் தூண்டுதலின் பேரில் பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர்; நன்னூலுக்குக் காண்டிகை உரை தந்தவர் அவர் தோற்றமே தனி: நெற்றியிலே பட்டை, கழுத்தினிலே உருத்திராட்சக் கொட்டை! ஒரு முறை, அடிதடி வழக்கில் இவர் சாட்சிக் கூண்டில் ஏற வேண்டி இருந்தது. அப்போதெல்லம் ஆங்கிலேயர் காலம். நீதி மன்றத் தலைவன் ஆங்கிலேயன் ; இவர் அருமையான ஆங்கிலத்தில் சாட்சி சொல்லத் தொடங்கிய உடனே அவனுக்கு எரிச்சல். ஆண்டி போல் இருப்பவன் ஆங்கிலத்தில் அழகாகப் பேசுவதா என்ற ஆற்றாமை. "எனக்குத் தமிழ் தெரியும் ; தமிழிலேயே சொல்லு" என்று சீறுகிறான். உடனே இவர், " எல்லி எழ நானாழிப் போதிருக்குங் காலை ஆழி வரம்பணித்தே காலோட்டப் புக்குழி..." எனத் தொடங்கினார். இவரின் தமிழ் அவனுக்குப் புரியவில்லை! உங்களுக்காவது புரிகிறதா ? (அதாவது, கதிரவன் தோன்றுவதற்குச் சில நிமிடங்கள் முன்பு காற்று வாங்கக் கடற்கரைக்குச் சென்ற போது ..." இதுதான் அதன் பொருள்!). இந்தத் தமிழ்- 18 -ஆம் நூற்றாண்டுச் செந்தமிழ் - புரியவில்லை என்றால் ஈராயிரம் ஆண்டுகள் முற்பட்ட தமிழ் எளிதாகப் புரிந்துவிடுமா என்ன! இக்காலத் தமிழர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழை எப்படி புரிந்து கொள்ளுவார்கள்? அதனாலதான் அந்த காலத் துறைச் சொற்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் ; அதற்குரிய அறிவு தேவைப்படுகிறது. அப்போதுதான் சங்க இலக்கியப் பாடல்களை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலும்.
உலகிலே உலவிய மொழிகளோ பலப்பல :அவற்றுள் மூத்தது கிரேக்கம் என்பர் ;அதனினும் மூத்தது நம் தமிழ் மொழியே! கிரேக்க மொழிக்குப் பல சொற்களை அளித்தது தமிழ்தான். ஆனால், நம்மை அடிமைப் படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் அவர்கள் மொழிகளுக்கு அடிப்படையாக அமைந்த கிரேக்கமே மொழிகளின் தாய்; அதுவே உலகின் மூத்த மொழி என்று தவறாகச் சொல்லிவிட்டார்கள்.
' tele' என்ற முன்னொட்டை எடுத்துக் கொள்வோம் ; இந்தக் கிரேக்கச் சொல் இன்று நம்மிடையே (ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளில்) பலசொற்களில் காணப்படுகிறது : 'television ', telephone', 'telepathy', 'teleconference. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த முன்னொட்டு ('tele'') கிரேக்கச் சொல் என்று மொழிநூல் அறிஞர்கள் கூறுவர். தொலைவு என்ற பொருளை இச்சொல் எப்படி, ஏன் உணர்த்துகிறது என்றால் அவர்களிடம் விடை இல்லை. இதற்கான விளக்கம், தெளிவு வேண்டும் என்றால் தமிழுக்கு வந்தாக வேண்டும். ஏனென்றால் இச்சொல் தொலை என்ற தமிழ்ச் சொல்லின் கிரேக்க வடிவம்.
அப்படியானல், இது எப்படி தொலைவு (தூரம்) என்ற பொருளைத் தருகிறது? தரையில் நிற்கும் விமானம் பெரிதாகத் தோன்றும் ; வானில் அது பறக்கத் தொடங்குகிறது; போகப் போக அதன் உருவம் சிறிதாகிறது. பின்னர் புள்ளியாகி இறுதியில் மறைந்தே போய்விடுகிறது. இப்படி மறைதல், காணாமல் போதல் என்பதைக் குறிக்கத் தமிழில் வேறொரு சொல் உள்ளதே: 'தொலைதல்'. எப்போது விமானம் காணாமல் போவதாகத் தோன்றுகிறது? நம்மை விட்டு வெகு தூரம் போன பிறகுதானே! இப்படியாகத் தான் தூரம் என்பதைத் 'தொலை' என்ற சொல் குறிக்கிறது.
இந்தக் கிரேக்க மொழியில் பல பாடல்களைத் தொகுத்துத் தொகை நூல்களாக ஆக்கினார்கள.அதற்குப் பெயர் 'anthology'.' இச்சொல்லின் மூலம் ''logos ' என்ற கிரேக்கச் சொல் ; இதற்குப் பொருள் 'உரையாடல்'. கிரேக்க ஞானிகள் உரையாடல் வழியாகத்தான் அறிவை வளர்த்தார்கள்.சாக்கிரடீசாக இருந்தாலும் சரி, அரிசுடாட்டில், பிளட்டோவாக ஆக இருந்தாலும் சரி இவர்கள் உரையாடல் வாயிலாக அறிவை வளர்த்தார்கள். இதன் அடிப்படையில் தான் இன்றைய அறிவியல் துறைகள் 'bilology ', 'zoology ', 'embriology ', 'nephrology ' பெயர் பெறுகின்றன.
கிரேக்கர்களைப் போலவே பழந் தமிழர்களும் பாடல்களைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து வைத்தார்கள். அவை தொகை நூல்கள் எனப் பெயர் பெற்றன.
தமிழன் எதனையும் அழகாக அடுக்கி வைப்பவன் ; காரண காரியத்தோடு பெயர் வைப்பவன் ; இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவன். இயற்கையை நோக்கிய தமிழன் எல்லாமே இருமையாக இருப்பதை உணர்கிறான் : இரவு-பகல்; காலை-மாலை;நன்று-தீது; உயர்வு-தாழ்வு; உயிர் -உடல்... தமிழன் தன் வாழ்வையும் இரண்டாக வகுத்து வைத்திருக்கிறான் :உள்ளும் புறமும் என்று. உள்ளிருப்பதற்கு அகம் என்றும் வெளியில் இருப்பதற்குப் புறம் என்றும் பெயர்! அகம் என்பதற்கு நச்சினார்க்கினியர் அழகான விளக்கம் தருவார் : " 'ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக 'இவ்வாறு இருந்ததெனக்' கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வாலே நுகர்ந்து இன்புறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்".இதுவரை எவரும் கூறாத வரையறை !
இதன் தொடர்பாக எழும் இலக்கியம் அக இலக்கியம் எனப்படும். இதில் முதலில் அறிந்துகொள்ள வேண்டியது : திணை. அப்படி என்றால் என்ன? ஒழுக்கம் என்பது இதன் பொருள். ஏழு திணைகள் உண்டு. ஏழு என்ற எண்ணுக்கும் இயற்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது : வானவில்லில் ஏழு வண்ணங்கள் ;வாரத்தில் ஏழு நாள்கள் ; பிறப்பு :7; கடல்கள் :7; மதில்கள் :7; இசைச் சுரங்கள் :7 ; கண்டங்கள் :7; திருக்குறளில் சீர்கள் :7; 1330 பாடல்கள், 133 அதிகாரங்கள் - இவற்றின் கூட்டுத் தொகையும் 7; வள்ளல்கள் :7 ;திருவரங்கத்துக்கும் ஏழு என்ற எண்ணுக்கும் தொடர்பு உண்டு :திருவரங்கத்துப் பெருமாள் 7 முறைதான் வெளியில் எழுந்தருளுவாராம்!
அதே ஏழு என்ற எண் திணைகளுக்கும் பொருந்துகிறது. அகத்துக்கும் ஏழு திணைகள் ; அப்படியே புறத்துக்கும் உண்டு.
"கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப" என்று தொல்காப்பியம் இலக்கணம் கூறும்.
கைக்கிளை என்பது ஒருதலைக் காதல்;எல்லாக் காதலுமே கைக்கிளையில்தான் தொடங்குகிறது. ஆடவன் பெண்ணைப் பார்ப்பது கிடையாது ; முதலில் பெண் தான் பார்க்கிறாள் பார்த்துவிட்டால் கண்ணால் தூண்டில் போடுகிறாள். அக் காதல் வகையில் ஆடவன் அகப்பட்டுக்கொள்கிறான்.
இக்கருத்தைக் கம்பனின் காவிய வரிகள் புலப்படுத்துகின்றன :
"நவ்விபோல் விழியினாள் தன்வன முலை நணுகலுற்றான்";
" தையலான் நயன வேலும் மன்மதன் சரமும். பாய..."
(கம்பஇராமாயணம் - பாலகாண்டம்- அகலிகைப் படலம்).
இந்திரன் மேல் கண்களை வீசிக் காமக் கணை தொடுத்தவள் அகலிகையே! அதனால் " உய்யலாம் உறுதி நாடி உழண்டானாம்" இந்திரன்.
இப்படிக் கைக்கிளையில் காமம் (காதல்) தொடங்குவதைத் திருவள்ளுவர் குறிப்பால் உணர்த்துகிறார் :
"அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு."
(குறள் 1081- களவியல் : தகையணங்குறுத்தல்)
இலக்கண நூலார் காட்சி, ஐயம், தெளிதல், தேறல் என்று நான்கு வகையாகப் பகுத்துப் பேசுவர்: பெண்ணைப் பார்க்கிறான் தலைவன் ; (அவள் இவனை இன்னும் காணவில்லை).- இது காட்சி!அவன் மனத்துள் ஐயம் எழுகிறது : தான் காண்பவள் தெய்வ மகளோ என்று. இதனை முதல் 'கொல்' உணர்த்துகிறது. நீண்ட நெடுங் கூந்தலை உடைய இவள் மயில் சாயல் உடைய பெண்ணோ என்கிறான் தலைவன் ; இந்த வியப்பை இரண்டாம் 'கொல் ' கூறுகிறது. இறுதியாக மாதரார் தொழுதேத்தும் மானிடப் பெண்ணே என்ற உறுதியான முடிவுக்கு வருகிறான். இதனை மூன்றாவது 'கொல் ' சொல்கிறது.சொல்லில் சிக்கனம் காட்டும் திருவள்ளுவர் ஒரே சொல்லை மூன்று முறை பெய்ய வேறு காரணம் இல்லையே! !
இவ்வண்ணம் கைக்கிளையில் தொடங்கும் காமம் (காதல்) அன்பின் ஐந்திணையாகப் பெருகுகிறது : இவற்றை நிலத்திணை என்று அக இலக்கணம் குறிக்கும்.அவை : குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகும் .
• மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை;
• காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை;
• இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை
• வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம்
• கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான குறியீடுகள் :
அதாவது ஒவ்வொரு திணைக்கு என்று உரிய பொருள் உண்டு :
குறிஞ்சி : புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
முல்லை : இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
மருதம் : ஊடலும் ஊடல்நிமித்தமும்
நெய்தல் : இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பாலை : பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
காலத்தையும் இடத்தையும் இணைத்துப்பார்த்த ஐன்ஸ்டினுக்கு முன்பாகவே அவை இரண்டையும் இணைத்துப் பார்த்திருக்கிறார்கள் பழந்தமிழர்கள்.
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.(குறள் 484) என்பார் திருவள்ளுவர்.
இடத்தை நான்காய்ப் பிரித்தார்கள் ; உலகை நானிலம் என்றுதானே சொல்கிறோம் ; ஆனால் அக இலக்கியத்தில் பாலை என்பதும் நிலங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்டுகிறதே ! இதற்கு விளக்கம் தருகிறார் இளங்கோவடிகள் :
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்தும்
பாலை என்பதோர் படிவங் கொள்ளும்"
(சிலப்பதிகாரம் காடுகாண் காதை 64-66)
மழை இல்லா வெயில் காலத்தில் முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் வறட்சியினால் வாடிப்போய் விடும்; அந்த மாதிரி நேரத்தில், அவை பாலை என்பதோர் படிவம் கொள்ளும்; பின்னர் மழை வருகின்றபோது அவை மறுபடியும் துளிர்க்கும் ; குறிஞ்சி குறிஞ்சியாகவும் முல்லை முல்லையாகவும் மீண்டும் மாறிவிடும்.
நிலத்தைப் பிரித்தது போலவே காலத்தையும் பிரித்திருக்கிறார்கள் : சிறு பொழுது, பெரும் பொழுது என்று. நாள் ஒன்றின் காலம் ஐந்தாகப் பிரிப்பட்டுள்ளது:மாலை, யாமம் (நள்ளிரவு),வைகறை (அதிகாலை நேரம்)எற்படு காலை (சூரியன் மறையும் நேரம், நண்பகல்.
ஓர் ஆண்டின் பெரும் பொழுதுகள் ஆறு: இளவேனில் (சித்திரை, வைகாசி),முதுவேனில் (ஆனி, ஆடி),கார்காலம் (ஆவணி, புரட்டாசி கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை),முன்பனிக்காலம் (மார்கழி, தை), பின்பனிக்காலம் (மாசி, பங்குனி). சங்க இலக்கியங்கள் கற்க பொழுது பற்றிய அறிவும் தேவை.
அடுத்து அறியவேண்டியது துறை. அப்படி என்றால்? ஆறு ஓடி வருகிறது; கண்ட கண்ட இடங்களில் எல்லாம் ஆற்றில் இறங்கி விட முடியாது.ஆழம் குறைவான பாதுகாப்பான இடத்தில்தான் இறங்க வேண்டும். மக்கள் நீராடுவதற்கும் நீர் எடுப்பதற்கும் வசதியாக இருக்கும் பாதுகாப்பான இடத்துக்குப் பெயர் துறை ; கப்பல்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப் படும் இடத்துக்குத் துறைமுகம் என்று பெயர்.
அக இலக்கியத்தில் துறை என்ற சொல் பாடலின் நோக்கத்தை, யார் யாருக்குச் சொல்லியது, எந்தச் சூழுலில் உரைத்தது போன்ற செய்திகள் (னயவய) முதலியற்றைச் சுருக்கமாகப் பொதிந்து வைப்பதுதான் துறை ஆகும். ஆகவே அகம், புறம் ஆகிய சங்க இலக்கியப் பாடல்களில் முதலில் திணையும் பின் அதன் துறையும் கண்டிப்பாகக் குறிக்கப்பெறும்.
சங்க அக இலக்கியங்களில் இடம்பெறும் பாத்திரங்களையும் அறிதல் வேண்டும் :முதன்மை இடம் தலைவிக்குத்தான் ; அடுத்த இடம் தோழிக்கு ; பின், தலைவன், செவிலித் தாய், நற்றாய், தோழன் அல்லது பாங்கன் முதலியோர் இடம் பெறுவார்கள். இவற்றை அறிந்துகொண்டால்தான் சங்க இலக்கியங்களைப் புரிந்துகொள்ள இயலும்.
இந்தச் சங்க இலக்கியங்களைத் தேடி எடுத்துத் தொகுத்த நம் முன்னோர் அதற்குச் சில வரையறைகள் வைத்திருந்தார்கள்.நான்கு முதல் எட்டு அடிகள் (வரிகள்) வரை உள்ள நானூறு பாடல்களைத் தொகுத்து அதற்குக் 'குறுந்தொகை' எனப் பெயர் இட்டனர். பிற்காலத்தில் யாரோ ஒருவர் கூடுதலாக இன்னொரு பாடலைச் சேர்த்துவிட்டார். இதை இடைச் செருகல் என்று சிலர் கூறுவர். சிற்றெல்லை நான்காவும் பேரெல்லை எட்டாகவும் உள்ள குறுந்தொகையில் இரண்டு பாடல்கள் மட்டும் (307 ரூ 391) ஒன்பது அடிகளைக் கொண்டுள்ளன. உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது.
குறுந்தொகையின் பண்புகள் ஏறக்குறைய எல்லா அக இலக்கியங்களுக்கும் பொருந்துவன. அவற்றில் ஒன்று :பாடலில் இடம்பெறும் பாத்திரங்கள் எதற்கும் பெயர் இராது. ஆங்கிலத்தில் கூறினால் 'யழெலெஅழரள ' எனலாம்."சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறார்" என்று தொல்காப்பியம் தடை போடுகிறது. பெயர் மட்டும் அல்ல் ஒருவரை அடையாளம் காட்டக்கூடிய எதுவும் இடம் பெறாது ; இடம் பெறக் கூடாது என்ற கடுமையான கட்டுப்பாடும் உண்டு. அப்படி இடம் பெற்றால் அப்பாடல் அகத்தில் சேராது; புறத்தில் வைக்கப்படும்.
'நெடுநல்வாடை'யில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று என்பார் நச்சினார்க்கினியனார்.
இதுவரை அக இலக்கியம் பற்றி அறிய வேண்டிய அடிப்படைகள் விளக்கப்பட்டன. இவற்றின் அடிப்படையில் குறுந்தொகைப் பாடல்கள் சிலவற்றின் சிறப்பியல்களைப் பார்க்கலாம்.
சங்கப் பாடல்களின் சிறப்பியல்புகளில் முதலில் குறிப்பிட வேண்டியது உவமை. தெரிந்த ஒன்றை வைத்துத் தெரியாத ஒன்றை விளக்குவது உவமை. தொல்காப்பியர் காலத்தில் அதனை உவமம் என்றார்கள். உவம இயல் என்றே ஓர் இயலைப் படைத்திருக்கிறார் அவர். (பிற்கால அணி இலக்கணத்தில் இது உவமையணி ஆகிவிட்டது).
குறுந்தொகையில் அழகான உவமைகள் ஏராளம் உண்டு.சில பாடல்களின் ஆசிரியர் யார் எனத் தெரியாத போது, அவர் கூறும் உவமயைக்கொண்டே அவருக்குப் பெயர் சூட்டி விடுவதையும் காணலாம். செம்புலப்பெயல் நீரார், அணிலாடு முன்றிலார்...போன்றவை அப்படி அமைந்தவைதாம் . பழந்தமிழ்ப் பாடல்களில் வரும் உவமைகள் அப்படியே நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருக்கும்.
இதோ குறுந்தொகையில் ஒரு காட்சி : தன் காதலின் அருமை பெருமைகளைத் தலைவி தோழியிடம் கூறிக்கொண்டிருக்கிறாள் :
"நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே..." (குறுந். குறிஞ்சித் திணை 3 -ஆம் பாடல்). தலைவனுடன் அவள் கொண்டிருக்கும் காதல் நிலத்தை விடப் பெரியதாம்; வானத்தை விட உயர்ந்ததாம்; பெருங் கடலை விட ஆழமானதாம்! எவ்வளவு பொருத்தமான உவமைகள்!
இதே கருத்து அமைந்த உவமைகளை 16-17-ஆம் நூற்றாண்டின் ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியர் காட்டுகிறார் :
" My bounty is as boundless as the sea
My love as deep; the more I give to
thee
The more I have> for both are
infinite."
(Shakespeare: Romeo and Juliette-ACT II SC II)
காலத்தால் இடத்தால் மொழியால் வேறு பட்டாலும் பெருங் கவிஞர்கள் சிந்தனை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
இன்னொரு பாடலில் வரும் காட்சி : தலைவன் இரவு நேரங்களில் வந்து தலைவியைச் சந்தித்துப் போகிறான். ஆனால் மணம் முடிப்பது பற்றிய கவலை இல்லாமல் இருக்கிறான். திருமணம் செய்துகொள்ள அவனைத் தூண்ட வேண்டும். தோழி புத்திக் கூர்மை உடையவள் ; தலைவனைச் "செவ்வியை ஆகுமதி" என அன்போடு விளிக்கிறாள் .அவன் கவனத்தைத் தன் பக்கம் திருப்புகிறாள்.சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லாமல் பலாப் பழங்கள் இரண்டைக் குறிப்பிடுகிறாள் : வளமான அவன் நாட்டில் பலாப் பழம் வேரிலே பழுத்திருக்கிறதாம்;
இதனை, "வேரல் வேலி வேர்க் கோள் பலவின்
சாரல் நாட !" என்று புலவர் குறிப்பிடுகிறார்.
தலைவியின் நாட்டிலோ பருத்துப் பெருத்த பலா சிறிய காம்பில் தொங்கிக்கொண்டு மரத்தோடு ஒட்டிக் கொனண்டுள்ளதாம்! காம்போ மிகச் சிறியது ; பழத்தின் உருவமும் கனமும் பெரியவை. சிறிய காம்பு அப்பழத்தை எவ்ளவு நேரம்தான் தாங்கும்? கனம் தங்க முடியாமல் காம்பு இற்றுப் போய்ப் பழம் வீழும் அல்லவா! அது போல இவள் உயிர் மிகச் சிறியது (காம்பைப் போல) ஆனால் இவள் காமமோ அப்பலா போல் பெரிதாக உள்ளதாம்.
இக்கருத்தைப் புலவர்,
"சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கி ஆங்கு,
இவள் உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே"
என்று ஓகாரம் போட்டுக் கூறுகிறார்.
(குறுந்தொகை 18;திணை : குறிஞ்சி).
தோழியின் கூற்றைத் தலைவன் நன்கு புரிந்துகொள்ளுகிறான் :
வேரிலே பழுத்த பலா மிக மிக இனிக்கும்; தலைவன் மீது தலைவி கொண்ட காதலும் அதுபோலவே இனிக்கிறது ; (தலைவன் காதலும் அப்படியே). முதல் பலா (என்ற உவமை) உணர்த்தும் கருத்து இதுதான்.
இரண்டாவது (உவமையான) பலா, தலைவியின் நிலையைக் குறிக்கிறது : எந்த நேரமும் காம்பு முறியக் கூடும் ; தரையில் விழ நேரிடும். அவன் திருமணம் புரியாவிட்டால் தலைவி உயிர் துறப்பாள் என்ற கருத்தை இது உணர்த்துகிறது.
உவமைகள் இரண்டின் வாயிலாகத் தோழி உணர்த்திய கருத்துகளைத் தலைவன் புரிந்துகொள்கிறான். பிறகென்ன கெட்டி மேளம் கொட்ட வேண்டியது தானே!
அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான... போன்றவை உவம உருபுகள் ; இவை 36 என்று தொல்காப்பியர் தொகுத்துக் கூறுவார். இந்த உவம உருபுகள் வெளிப்டையாகத் தெரியவரின் அவற்றை உவமை (உவமம்) என்பர் ; உவமம் மட்டும் சொல்லிவிட்டு அதற்கு நிகரான உவமேயத்தைப் பாடலில் உய்த்துணர வைப்பது உள்ளுறை உவமாகும்.
மேலே குறிப்பிட்ட குறுந்தொகைப் பாடலில் முதல் உவமம் குறிப்பது தலைவியின் காதலை ; இரண்டாவது உவமம் அவள் காதல் நிலையை ; படிப்பவர் இவற்றை ஊகித்து அறிந்துகொள்ள வேண்டும். ஆகவே இவை உள்ளுறை உவமங்கள் ஆகின்றன.
சங்கப் பாடல்களைப் பற்றிச் சொல்கின்ற போது என்னுடைய பேராசிரியர் மு. வரதராசனார், அவை பழங்களுக்கு ஒப்பானவை என்பார் : எல்லாப் பழங்களையும் ஒரே மாத்திரியாகவா சாப்பிடுகிறோம்? மா, வாழை பழத்தைச் சாப்பிடுவது எப்படி? சாத்துக்குடி ஆக இருந்தால் எப்படி? சாதாரண திராட்சை மாதுளை உண்பது எப்படி? எல்லாவற்றையும்விட பலாப் பழத்தை சாப்பிட வேண்டும் என்றால் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்! அந்த பலாப்பழத்தை வெட்டவேண்டும் அறுக்க வேண்டும் அதற்குள் சடை சடையாய்ப் பதிந்திருக்கின்ற சடைகளை எடுக்க வேண்டும். அவற்றை எடுக்கும்போது பிசு பிசு என்று பசை ஒட்டும் அப்படி ஒட்டாமல் இருக்கக் கைகளில் எண்ணெய் தடவ வேண்டும் அதற்குப் பிறகு தானே சுளைகளை எடுக்க முடியும். அவற்றுக்கு உள்ளே இருக்கிற கொட்டைகளை நீக்கவேண்டும். இவ்வளவு எல்லாம் முயற்சி செய்த பிறகுதான் சுவையான பழம் கிடைக்கும்.
கவிதைகளைக் "காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்" என்பார் கம்பரும்.
அவை போலத்தான் சங்கப் பாடல்களும் ; சில பாடல்கள் மிக எளிதாகப் புரியும் ; பல பாடல்கள் மிகுந்த முயற்சிக்குப் (பயிற்சிக்குப்) பின்பே புரிபடும். சிலவற்றுக்கு உரையாசிரியர்களின் உதவி தேவை. அகநானூறு, பதிற்றுப்பத்து... போன்றவற்றைப் படித்த உடனே புரிந்து கொள்ள முடியாது .ஆகவே சங்க இலக்கியப் பயிற்சி தேவை.
உவமம், உள்ளுறை உவமம் பார்த்த பிறகு மூன்றாவதாக ஒன்று உள்ளது : அதன் பெயர்தான் : இறைச்சி.இதனை விளக்குவது கொஞ்சம் கடினம்.
சுருக்கமாகச் சொன்னால், இது போல அது மாதிரி என்று கூறினால் அது உவமம் ; உவமை ஒன்றைக் குறிப்பிட்டுவிட்டு அதற்கு ஈடான (உவமேயம்) ஒன்று பாடலில் பொதிந்து உள்ளது என்று உய்த்துணரச் சொன்னால் அது உள்ளுறை உவமம்; இவை இரண்டும் அல்லாமல் பாடலுக்கு அப்பாற்பட்டு (புறத்தே) தோன்றுவது இறைச்சி. இதனை வள்ளுவரின் குறள் வழி விளக்கலாம் :
"நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்". (குறள் எண் – 476).
மரத்தில் ஏறுவது பற்றி வள்ளுவர் சொல்வது போல் தோன்றினாலும் அவர் உணர்த்த வரும் கருத்து வேறானது : எதற்கும் அளவு உண்டு அதனை உணராது தொடர்ந்தால் அழிவே விளையும் ; இதுதான் அவர் உணரத்தும் பொருள். சொல்ல வந்ததற்குப் புறத்தே வேறொரு கருத்தை உணர்த்துவது இறைச்சி ஆகும். பிற்கால அணியிலக்கணம் இதனைப் 'பிறிது மொழிதலணி ' எனக் கூறும் என்று பாவாணர் குறிப்பிடுகிறார்.'வேற்றுப்பொருள் வைப்பணி ' என்றாலும் பொருந்தும்.
முன்பொரு காலத்தில் மகளிரிடையே வழங்கி வந்த சாடை (மாடையாகப்) பேசுதல் போல் உரைத்தலும் இறைச்சி ஆகும். பரத்தையிடம் சென்று வந்த தலைவனை வரவேற்கும் தலைவி அவன் நாட்டைப் புகழ்வது போல் கூறுகிறாள் : "பசும்புல் மேய்ந்து நிழலிலே இளைப்பாற வேண்டிய எருமை அதை விடுத்துச் சேற்றிலே இறங்கி நீர்ப் பூக்களை சுவைக்கும் வளமான நாட்டுக்குத் தலைவனே!" என்பாள் ; சொல்வது நாட்டு வளத்தை என்றாலும் அவள் குறிப்பால் உணர்த்துவது வேறு :பசும்புல்ஸ்ரீதலைவி; எருமைஸ்ரீதலைவன்; நீர்ப் பூக்கள் ஸ்ரீபரத்தையர் ; சேறுஸ்ரீபரத்தைகளோடு ஆடுதல் (கூடுதல்). இப்படி உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது இறைச்சி. இதனை நன்றாகப் புரிந்து கொண்டால்தான் சங்க இலக்கியத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்; புரிந்து கொள்ள முடியும்.
"மலரினும் மெல்லிது காமம் "(குறள் 1289)- திருவள்ளுவர் வாக்கு. இதனை உணர்ந்த காதலர்கள் சிறிது நேரப் பிரிவைக் கூடத் தாங்க மாட்டார்களாம். இதனை உணர்த்துகிறது குறுந்தொகைப் பாடல் 57
(நெய்தல் திணை; சிறைக்குடி ஆந்தையார்.) :
"பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவே மாகிய வுலகத்
தொருவே மாகிய புன்மைநா முயற்கே."
அக்காலத்தில் மகன்றில் பறவை என்ற இனம் இருந்ததாம். இது அன்னம் போல இருக்குமாம் ; ( இந்தப் பறவை , அன்னம், கவரி மா, அனிச்சம் பூ ... போன்றன அழிந்துவிட்டன).இவை இணை பிரியாதவை ; நீரிலே நீந்தி வரும் போது பூ ஒன்று நடுவில் இருக்கிறது ; அதனால் இவை சற்றே பிரிந்து உடனே மறுபடி ஒன்று சேர்கின்றன ; அந்த நொடிப் பொழுது பிரிவைக்கூடத் தாங்க முடியாமல் துடிக்கின்றனவாம்!
தானும் தன் தலைவனும் பிரிவதை விட ஒன்றாக உயிர் துறப்பது நல்லது என்கிறாள் இப்பாடலின் தலைவி. இப்படி நடக்குமா? நடக்கும் என்று சிலப்பதிகாரம் உரைக்கிறதே ! தன் தவற்றை உணர்ந்த பாண்டியன் அரியணையில் உயிர் துறக்கிறான் ; உடன் அவன் மனைவி கோப்பெருந்தேவி "கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்லலென"க் கூறி இணையடி தொழுது இறக்கிறாள்.
சங்க காலத்தில் தாய் வழி அல்லது தந்தை வழி உறவுகளுக்கு இடையில் திருமணம் நிகழ்ந்து இருக்கிறது. இதனைக் குறுந்தொகை 40-ஆம் பாடலான "யாயும் ஞாயும் யாராகியரோ" என்ற பாடல் உணர்த்துகிறது. மிகப் புகழ் பெற்ற பாடல். இதனை யாத்தவர் யார் எனத் தெரியவில்லை. அதனால் இதில் வரும் உவமையை வைத்தே 'செம்புலப் பெயல் நீரார்' என்று இவருக்குப் பெயர் இட்டனர் என்று முன்னரே பார்த்தோம்.
இப்பாடலில் இருந்து மானிடவியல் கருத்து ஒன்று புலப்படுகிறது. '. 'Claude Lévi-Strauss'(1908-2009) என்பவர் பிரஞ்சு மானிடவியல் அறிஞர் (anthropologist). மக்கள் இனக் குழுக்களைப் பற்றியும் ஆராய்ந்தவர் (ethnologist). பழங்ககாலத் திருமண முறைகளை இவர் இரண்டாக்கப் பிரிக்கிறார் : ''endogamy' 'exogamy' என்று; குறிப்பிட்ட சமூகக் குழு தன் இனத்துக்குள்ளேயே மண உறவு கொள்வது அகமணம் ((endogamy); வேற்று இனத்தோடு திருமண உறவு வைப்பது புறமணம் ((exogamy). இதனைப் பற்றி ஆராய்ந்த முனைவர் க. இராஜா ( கிருட்டினகிரி (மா.).)"
" சங்ககால மக்கள் ஒரே குழுவுக்குள், நிலப்பரப்பு அல்லது ஊருக்குள் அகமண முறையிலும், விதிமுறைக்கு உட்படாத முறையில புறமண முறையிலும் திருமணம் செய்தனர். சங்ககாலச் சமுதாயத்தில் திருமணம் தாய், தந்தை ஆகிய இரு வழியிலும் செய்யப்பட்டமையும், அம்முறையை மீறிச் சுதந்திரமாய் உலாவும் காதல் வாழ்வைக் கொண்டமையும் அறியமுடிகின்றது." என்கிறார்.
((https://www.vallamai.com/?p=87644)
பொதுவாக உறவு முறையில் தானே திருமணம் முடிப்பது வழக்கம் ; அப்படி இருக்கத் "தாய் வழியிலோ தந்தை வழியிலோ வேறு எந்த வழியிலோஉறவு இல்லாத நீயும் யானும் செம்புலப் பெயல் நீர் போல இணைந்து விட்டோமே" எனத் தலைவன் வியக்கிறான் 'செம்புலப் பெயல் நீரார்' பாடலில்.
எனவே புற மண (நனெழபயஅல) முறையும் இருந்துள்ளது என்று இப்பாடல் சான்று கூறுகிறது.
இப்பாடலின் நலன்களைப் பார்ப்போம் : இந்த ஒரு பாட்டிலேயே உவமம், உள்ளுறை உவமம், இறைச்சி மூன்றும் உள்ளன!"செம்புலப் பெயல் நீர் போல " என்ற வரியில் உவமம் வெளிப்டையாகத் தெரிகிறது. இதில் உள்ளுறை உவமம் எங்கே வருகிறது? பெயல் நீர் என்ற சொல் மழை என்பது பொருள்; இது ஆடவனைக் குறிக்கிறது. (பெயல் நீர் ஸ்ரீ தலைவன்). அடுத்தது மண் ; செம்புலம் என்பது பெண்ணை அதாவது தலைவியைச் சுட்டுகிறது. பாடலில் இடம் பெறும் சொற்கள் பாடலுக்கு உள்ளே தலைவனையும் தலைவியையும் குறிப்பதால் இவை இரண்டும் உள்ளுறை உவமங்கள் ஆகின்றன.
"அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே " என்றுகூறுவதால், இருமனக் கலப்பை இப்பாடல் வெளிப்படுத்துகிறது என்றே பொதுவாகப் பொருள் கூறுவர். ஆனால் இப்பாடல் ஈருடல்களின் கலப்பையும் சுட்டி நிற்கிறது.
உடல் கூறு பற்றி நாம் அறிவோம் ; குழந்தை உருவாகும் விதமும் நமக்குத் தெரியும். திருமூலர் இவற்றைப் பற்றித் தெளிவாக விளக்கியிருக்கிறார். அவர் கூறிய அனைத்தும் அறிவியல் உண்மைகளே என்பதை இக்காலக் கருவியல் ('('embriology') மகப்பேற்றியல்(obstetrics'')...உறுதி செய்கின்றன.
பெண்ணின் உடலில் ஒரு மாதத்துக்கு ஒரு முட்டை மட்டுமே தோன்றும்; அம்முட்டையின் நிறம் என்ன? சிவப்பு.பெண்ணைக் குறிக்கும் புலத்தின் (மண்ணின்) நிறமும் சிவப்பு.ஆணின் உடலிலோ கோடிக்கணக்கான விந்தணுக்கள்; அவற்றின் நிறம் வெள்ளை ; மழை நீருக்கு நிறம் இல்லை; சார்ந்ததன் வண்ணம் ஆதல் அதன் இயல்பு என்றாலும் வானில் இருந்து அது இறங்கும் போது அதன் நிறம் வெண்மைதானே! ஆகவே மழை ஆடவனைக் குறிக்கிறது. வானில் இருந்து வரும் வெள்ளை நிற மழை (நீர்) மண்ணில் இருக்கும் சிவப்பு நிலத்தில் கலக்கிறது. இரண்டும் ஒன்றாகின்றன - பிரிக்க முடியாதபடி!
அப்படிதான் பெண்ணில் ஆண் கலக்கிறான். இதனைத்தான் மெய்யுறு புணர்ச்சி என்று அக இலக்கணம் கூறும். திருமண பந்தம் ஏற்படுவதற்கு முன்பாகவே உடலுறவு (premarital sex) கொண்டிருக்கிறார்கள் பழந்தமிழர்கள். இக்கருத்தையும் இப்பாடல் புலப்படுத்துகிறது.
அகத் திணை இத்துடன் நின்றுவிடுகிறது. ஆனால் வாழ்க்கை அத்துடன் முடிவது இல்லையே. அதில் இருந்து புறத்துக்கு வந்தாக வேண்டும். கைக்கிளையில் தொடங்கும் காதல் அன்பின் ஐந்திணையாகக் களவியலில் பெருகுகிறது ; திருமணம் முடித்த நிலையில் கற்பியலாத் தொடர்கிறது. புறத்தில் தான் அது உச்சம் தொடுகிறது. அகமும் புறமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்; இரண்டும் இணைந்ததுதான் வாழ்க்கை. செம்மண்ணில் கலந்த மழை நீர் போலத் தம்முள் கலந்த உள்ளங்கள் உடலாலும்- விடுதல் அறியா விருப்பினராகி- கலந்துவிடுகின்றன.
அதன் விளைவாகக் கருவாக உருவாகும் குழந்தை உள்ளேயே தங்கிவிட்டால் பயன் இல்லை ; அதனால் தீங்குதான் நேரும் அது வெளியே வந்தாக வேண்டும். அகம் கனிந்து புறத்து வரும் பொது ஒவ்வொருவரின் தலையாய கடமைகளை அடுக்கும் பொன்முடியார் முதலிடம் தருவது பெண்ணின் கடமைக்குத்தான்
"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே " என்கிறார் அவர்.(புறம் 312).
இக்காலப் பெண்களுக்கு அவர் இக்கடமையை இன்றும் நினைவூட்டிக்கொண்டே இருக்கிறார். கோடிக்கணக்கான விந்தணுக்கள் பெருகிக் கிடந்த காலம் போய் இன்று அவை அருகிப்போய்க் கொண்டு இருகினறன. அதன் விளைவாகத்தான் பல ஊர்களிலும் 'கநசவடைவைல உநவெநச ' முளைத்துக் கொண்டுள்ளன.இச்சூழலில், பிள்ளைப் பேற்றைப் பெண்களும் தடை செய்தால் வருங் காலம் என்னாவது? பொன்முடியார் அறிவுரை இக்காலத்துக்கு மிகவும் தேவையாக உள்ளது.
இவ்வளவு கருத்துகளையும் உள்ளடக்கிய குறுந்தொகைப் பாடல் சிறப்பான பாடல் தானே! இத்தகு உயர்ந்த கருத்துகள், அழகிய உவமங்கள், இறைச்சிகள், வாழ்வியல் உண்மைகள் குறுந்தொகைப் பாடல்களில் உள்ளன. அவற்றைப படித்துப் பயன் பெறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாசகர்களே உங்கள் கருத்துக்களைப் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்